போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 23 January 2013

திருப்பூரில் புத்தக கண்காட்சி 37 பதிப்பகங்கள் பங்கேற்பு


திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூர் கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் புத்தக திருவிழா, வரும் 25ல் துவங்கி, பிப்., 3 வரை நடக்கிறது; தினமும் மாலை கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 37 பதிப்பகங்கள்; 36 விற்பனையாளர்கள்; 11 மல்டி மீடியா நிறுவனங்கள் பங்கேற்று, 120 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.
வரவேற்பு குழு தலைவர் சவுக்கத்தலி, செயலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவ து:

திருப்பூரில், 10 வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. வன்முறை, போதை என சீரழிந்துள்ள சமுதாயத்தை மாற்றவும், மனித மாண்புகளை மீட்கவும், கருத்தியல், சுரண்டலுக்கு எதிராக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

திருப்பூரில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து, கடந்தாண்டை விட, 25 பதிப்பாளர்கள் ஆர்வமாக முன்வந்து, பங்கேற்கின்றனர். தினமும் மாலை கருத்தரங்கு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள் வெளியிடப்படும்.

நிகழ்ச்சிகளில், தமிழக அரசின் முதன்மை செயலர் இறையன்பு, அரசு செயலர் தனவேல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், போலீஸ் டி.ஐ.ஜி., பாரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, கருத்துரை வழங்குகின்றனர். புத்தக திருவிழாவை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ஆனந்தனர் திறந்து வைக்கவும், முதல் விற்பனையை மேயர் விசாலாட்சி துவக்கி வைக்கவும் உள்ளனர், என்றனர்.

திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, படுக்கை வசதி டிக்கெட் ரூ.245


திருப்பூர் : சமீபத்தில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை செல்ல, படுக்கை வசதியுள்ள ஒரு டிக்கெட், 245 ரூபாய்; இது, பழைய கட்டணத்தில் இருந்து 28 ரூபாய் அதிகம். சாதாரண டிக்கெட், 130 ரூபாய்; இது, 22 ரூபாய் உயர்ந்துள்ளது.சமீபத்தில், ரயில் கட்டணத்தை உயர்த்தி, ரயில்வே துறை அறிவித்தது. புறநகர் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் கி.மீ.,க்கு, 2 பைசா, புறநகர் இல்லாத பகுதிகளுக்கு, கி.மீ.,க்கு 3 பைசா உயர்த்தியது. இரண்டாம் வகுப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், கி.மீ.,க்கு, 4 பைசா, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்களில் 6 பைசா உயர்த்தப்பட்டது. புதிய கட்டண விகிதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் பயணிக்க கட்டண விவரம்:

சென்னைக்கு பழைய சாதாரண கட்டணம் 108 ரூபாய்; ரூ.22 அதிகரித்து, 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. படுக்கை வசதி பழைய கட்டணம் 217 ரூபாய்; ரூ.28 அதிகரித்து, 245 ஆகியுள்ளது. மூன்றடுக்கு "ஏசி' பழைய கட்டணம் 572; புதிய கட்டணம் 620; இரண்டடுக்கு "ஏசி' பழையது 845; புதியது 870 என அதிகரித்துள்ளது.

பெங்களூரு செல்ல பழைய சாதாரண கட்டணம் 89; புதிய கட்டணம் 105. படுக்கை வசதி பழையது 178; புதியது 205. மூன்றடுக்கு "ஏசி' பழையது 430; புதியது 530. இரண்டடுக்கு "ஏசி' பழையது 730; புதியது 755 ரூபாய்.
மதுரைக்கு பழைய சாதாரண கட்டணம் 66 ரூபாய்; புதியது 80. படுக்கை வசதி பழையது 140; புதியது 160. மூன்றடுக்கு "ஏசி' பழையது 376; புதியது 445 ஆக உயர்ந்துள்ளது. திருப்பதிக்கு இரவில் செல்லும் அதிவிரைவு ரயிலில் பழைய சாதாரண கட்டணம் 85; புதியது 125. படுக்கை கட்டணம் பழையது 191; புதியது 220. மூன்றடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 524; புதியது 570. இரண்டடுக்கு "ஏசி' கட்டணம் பழையது 785; புதியது 815 ஆக உயர்ந்துள்ளது. பகலில் செல்லும் ரயிலில் உட்காரும் இருக்கை பழையது 120; புதியது 140. "ஏசி' சேர்கார் பழையது 441; புதியது 485 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் இருந்து சேலத்துக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 25, ஈரோடு, கோவைக்கு சூப்பர் பாஸ்ட் 40, எக்ஸ்பிரஸ் 30, பாசஞ்சர் 15, மதுரை எக்ஸ்பிரஸ் 80, பாசஞ்சர் 45, திருநெல்வேலிக்கு எக்ஸ்பிரஸ் 115, பாசஞ்சர் 65, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 130, பாசஞ்சர் 75, பாலக்காடு சூப்பர் பாஸ்ட் 55, எக்ஸ்பிரஸ் 45, பாசஞ்சர் 20, பெங்களூரு எக்ஸ்பிரஸ் 95, பாசஞ்சர் 55 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்கு செல்ல, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு செய்யும் இடத்திலும், தகவல் மையத்திலும், சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், அவ்விரண்டு இடங்களில், கூடுதல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம், என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மின் தடையா... நடுநிசியிலும் புகார் செய்யலாம்!


 திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், மின்தடை தொடர்பாக, எந்நேரமும் புகார் செய்யலாம்.திருப்பூர் கோட்ட மின் வாரியத்துக்கு உட்பட்ட 31 பிரிவு அலுவலகங்களில் 2.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் மின் தடை தொடர்பாக எந்நேரமும் பொதுமக்கள் புகார் செய்யும் வகையிலும், உடனுக்குடன் சரி செய்யும் வகையிலும், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம், குமார் நகர் அலுவலகத்தில் நேற்று துவக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., போன் மற்றும் மொபைல் போன் மூலம் 155 333 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், 0421 - 2259 100; 94458 58778 ; 94458 58779; 94458 58780 ஆகிய எண்களுக்கும் அழைத்து புகார் செய்யலாம். மின் தடையை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகார் தெரிவிப்பவர்கள், மின் இணைப்பின் 10 இலக்க எண்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது:திருப்பூர் மாகராட்சிக்கு உட்பட்ட பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், பிரிட்ஜ்வே காலனி, வீரபாண்டி பிரிவு, ஆண்டிபாளையம், முதலிபாளையம், நல் லூர், சிட்கோ உள்ளிட்ட 31 பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிக்க, 10 இலக்க மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டும். தனியார் மின் இணைப்புகளை பொருத்தவரை, பகல் நேரங்களில் புகார் பெறப்பட்டால், உடனுக்குடன் சரி செய்யப்படும். மாலை 6.00 மணிக்கு மேல் புகார் பதிவு செய்தால், மறுநாள் காலை 9.00 மணிக்குள் சரி செய்யப்படும்.
ஒரு பகுதி முழுவதும் மின் தடை, "டிரான்ஸ்பார்மர்' பழுது, மின் ஒயர் அறுந்து விழுதல் உள்ளிட்ட அனைத்து மின் தடை பிரச்னைகள் குறித்தும் புகார் வந்தால், இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும், உடனுக்குடன் சரி செய்யப்படும், என்றார்.


Wednesday 2 January 2013

விரைவில் திருப்பூர் தாலுகாவை பிரிக்க அரசாணை


திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பது தொடர்பாக, கலெக்டர்கள் மாநாட்டில் விவாதித்துள்ளதால், விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.தொழில் நகரமான திருப்பூரில், வெளிமாவட்ட மக்கள் அதிகமாக குடியேறி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன், பல்லடம் தாலுகாவில், திருப்பூர் நகரம் ஒரு பிர்காவாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்தாலும், பொருளாதார வளர்ச்சியாலும், தாலுகாவாக, மாநகராட்சியாக, மாவட்டமாகவும் உயர்ந்துள்ளது.அதேநேரத்தில், அரசு பணிகளையும், திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றுவது, திருப்பூரில் மந்தமாகிறது. எனவே, நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை வடக்கு, தெற்கு என பிரிக்க உத்தேசிக்கப்பட்டது.