போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 2 January 2013

விரைவில் திருப்பூர் தாலுகாவை பிரிக்க அரசாணை


திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பது தொடர்பாக, கலெக்டர்கள் மாநாட்டில் விவாதித்துள்ளதால், விரைவில் அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.தொழில் நகரமான திருப்பூரில், வெளிமாவட்ட மக்கள் அதிகமாக குடியேறி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன், பல்லடம் தாலுகாவில், திருப்பூர் நகரம் ஒரு பிர்காவாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்தாலும், பொருளாதார வளர்ச்சியாலும், தாலுகாவாக, மாநகராட்சியாக, மாவட்டமாகவும் உயர்ந்துள்ளது.அதேநேரத்தில், அரசு பணிகளையும், திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றுவது, திருப்பூரில் மந்தமாகிறது. எனவே, நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை வடக்கு, தெற்கு என பிரிக்க உத்தேசிக்கப்பட்டது.


வடக்கு பிர்காவை இரண்டாக பிரித்து, திருப்பூர் வடக்கு, வேலம்பாளையம் பிர்காவாக மாற்றி, வடக்கு தாலுகா, தெற்கு அவிநாசிபாளையம், திருப்பூர் தெற்கு பிர்காக்களை கொண்டு தெற்கு தாலுகா உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாலுகாவை பிரிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.மாவட்ட வருவாய்த்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம் உருவானபோது, திருப்பூர், காங்கயம், அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் என ஆறு தாலுகாக்கள் இருந்தன. அதன்பின், நிர்வாக வசதிக்காக மடத்துக்குளம் தாலுகா உருவாக்கப்பட்டது. மாவட்ட அளவில், திருப்பூர் தாலுகா நிர்வாக பணிகள் மிகவும் சிரமமாக இருப்பதால், வடக்கு, தெற்கு என பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை அடிப்படையில் இரு தாலுகா புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்காக கருத்துரு அனுப்பப்பட்டது. தலா இரண்டு பிர்காக்களை கொண்ட, வடக்கு தாலுகாவில் 5.40 லட்சம் மக்கள்; தெற்கு தாலுகாவில் 4.75 லட்சம் மக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்கள் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளது.
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் அலுவலகத்தில், தினமும் இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. அரசாணை வெளியானதும், அரசு தரப்பு அறிவுரைப்படி, மாவட்ட நிர்வாகம் இறுதி அறிக்கையை தயாரித்து அளிக்கும். அதை அடிப்படையாக கொண்டு, தாலுகா உருவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment