போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 28 November 2012

தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி திருப்பூரில் தொழில் துறையினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தொழில் துறையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் தொழில் துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, திருப்பூருக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி, தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். 

மின்வெட்டு சமயத்திலும் குறைந்தபட்ச கட்டணமா?


திருப்பூர்:தினமும் 75 சதவீதம் மின்வெட்டு ஏற்படும் நிலையிலும், குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கும் மின்வாரிய நடைமுறைக்கு கிரில் ஒர்க் ஷாப் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இச்சங்க கூட்டம், சமீபத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டால் கடுமையாக பாதித்துள்ள சிறு, குறு தொழில்களுக்கு பகலில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்;இரவு நேரங்களில் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். சென்னைக்கு இரண்டு மணி நேரம், மற்ற பகுதிகளுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு என, மற்ற பகுதி மக்களை, இரண்டாம் தர மக்களாக கருதும் போக்கை கைவிட்டு, அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.
தினமும் 75 சதவீதம் மின்வெட்டு செய்து விட்டு, குறைந்தபட்ச மின் கட்டணத்தை 100 சதவீதம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்த வேண்டும். பழுதடைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவும், புதிய மின் திட்ட பணிகளை வேகப்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும், வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தின் தொழில் துறை, விவசாய துறை, பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு, ஒன்று சேர்ந்து, மத்திய அரசிடம் பேசி, கூடுதல் மின்சாரம் பெற வேண்டும். இலவச திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு, புதிய மின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, வருங்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்,என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கேபிள் இணைப்பு படிவம் ரேஷன் கடைகளுக்கு வினியோகம்


:திருப்பூர் மாவட்டத்தில் கேபிள் "டிவி' கணக்கெடுப்பு படிவங்கள், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்களிடம் படிவத்தை கொடுத்து, விரைவில் பூர்த்தி செய்து பெற விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கேபிள் இணைப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை கண்டறிய கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 7.26 லட்சம் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, ஏழு தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பொருட்கள் வழங் கும்போது, கார்டுதாரர்களிடம் படிவங்கள் வழங்கப்படும்.
உடனடியாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கலாம். அவகாசம் தேவை எனில், வீட்டுக்கு எடுத்துச்சென்று, படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நாட்களில் திரும்ப கொடுக்கலாம். நகரப்பகுதியில் உள்ள கடைகளில், படிவங் கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.படிவங்கள் கையாள்வதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, வரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை வரிசைப்படுத்தி, தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிவங்களை விரைவில் பெறுவதற்காக, கார்டுதாரர்களுக்கு உதவியாக விற்பனையாளரே பூர்த்தி செய்து, கையொப்பம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள், கேபிள் இணைப்பு விவரங்களை எவ்வாறு தெரிவிப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.கேபிள் "டிவி' தனி தாசில்தார் சிவசுப்ரமணியத்திடம் கேட்ட போது,""முதல்கட்டமாக, ரேஷன் கடைகளுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கார்டு இல்லாதவர்களும், படிவத்தை கேட்டுப்பெற்றும், வெள்ளை தாளில் விவரங்களை எழுதியும், அருகில் உள்ள ரேஷன் கடையில் கொடுக்கலாம். கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து கடந்த மாத நிலுவை வசூலாகிவிட்டது. நடப்பு மாத கட்டணத்தில் 65 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் நிலுவை தொகையும் வசூலிக்கப்படும்,'' என்றார்.

Tuesday 27 November 2012

தடையில்லா மின்சாரம் கோரி திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் துறையினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், "லட்சம் பேர்
பேரணி' நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருப்பூர், வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 57 தொழில் அமைப்புகள், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மின்வெட்டை கண்டித்து மாபெரும் பேரணி: போலீசார் தடை


திருப்பூர்,தமிழகம் முழுவதும் தொடர்ந்து மின் வெட்டு நிலவி வருகிறது.  இந்த தொடர் மின் வெட்டால் பல்வேறு பனியன் கம்பெனிகள் மற்றும் தொழில் துறை பாதிப்படைந்து உள்ளன.  இந்த தொடர் மின் வெட்டை தடுத்து மின்சாரத்தை முறையாக வழங்க கோரி வருகிற 28ந் தேதி தொழில் பாதுகாப்பு குழு சார்பில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.  இந்நிலையில், அரசை கண்டித்து நடைபெறும் இந்த பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளன

Sunday 25 November 2012

:திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்சம்; குமுறும் பொதுமக்கள்


திருப்பூரில், மின் தடை ஏற்படுவதில், சில பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கி பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில், தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்த மின் உற்பத்தியை கணக்கிட்டு, மின்சார இருப்பு அடிப்படையில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது. திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஈரோடு "லோடு செட்டிங்' சென்டர் மூலம் நேரடியாக 240, 230 கே.வி., துணை மின் நிலையங்களுக்கு உத்தரவு வழங்கப்படுகிறது.இந்த துணை மின் நிலையங்களுக்கு கீழுள்ள 110, 90, 33 கே.வி., துணை மின் நிலையங்களில் ஒரு சிலவற்றுக்கு நேரடியாக மின் நிறுத் தம் செய்யப்படாமல் மின் வினியோகம் செய்யப்படுகிறது. சில சிறிய துணை மின் நிலையங்களுக்கு இரண்டு பெரிய துணை மின் நிலையங்களுக்கு தொடர்பு இருக்கும். இதையும் பயன்படுத்தி, முக் கியமான நபர்களுக்கு மின் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம், தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை மின்சாரம் கிடைப் பதோடு, துணை மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் வழங்கப்படும் மின்சாரம் காரணமாக, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் நிலையும் உள்ளது.இவ்வாறு, திருப்பூர் குமரானந்தபுரம், நெசவாளர் காலனி பகுதிகள் அருகருகே இருக்கும் நிலையில், நெசவாளர் காலனி ஒரு பீடர் பகுதியில் மட்டும், மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து 8 மணி நேரம் வரை மின் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அப்பகுதி பனியன் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் புகார் எழுப்பியதையடுத்து, ஆய்வு செய்தபோது மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் காரணமாக, மின்சாரம் தொடர்ந்து வழங்கப் பட்டது கண்டறியப்பட்டது.
அதேபோல், சந்தைபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஒரு பீடரில் மட்டும், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, கலெக்டர் அலுவலகம், அப்பகுதியில் அமைந்துள்ளதால் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறு, பாரபட்சமான முறையில், சில பகுதிகளுக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், துணை மின் நிலையங்களில் முறையாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதால், தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் "பில்லிங்' பணிகள் இருப்பதால், நெசவாளர் காலனி பகுதியில் மின் தடை குறைந்து காணப்படும். மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு மட்டும் வேண்டாம்; இருக்கும்போது பணிகள் மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ளதுபோல்,நெசவாளர் காலனி பகுதியிலும் மின் தடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday 24 November 2012

மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை ஈர்க்கவே திருப்பூரில் 28-ம் தேதி பேரணி


திருப்பூர்: மின்வெட்டு பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வரும் 28ம் தேதி  பேரணி நடக்கிறது என்று திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் ஆகியோர் அளித்த பேட்டி:  கடும் மின்வெட்டால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில் துறையினர் பெரும¢ அவதிப்படுகின்றனர். குறித்த நேரத்தில் பனியன் ஆர்டர்களை அனுப்ப முடியாமலும், புதிய ஆர்டர்களை வாங்க முடியாமலும் தொழில் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. விடுமுறையில் ஊருக்கு சென்ற தென் மாவட்ட தொழிலாளர்கள் திரும்பிவரவில்லை. விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள¢ளப்பட்டுள்ளனர்.  திருப்பூர், கோவை மாவட்டங்கள் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி, பஞ்சாலை, விவசாயம் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கொடுக்கிறது. மின்பற்றாக்குறையை போக்க மத்திய அரசு மின் தொகுப்பிலிருந்து அரசு தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். தாமதமாக நடைபெற்றுவரும் புதிய மின் உற்பத்தி நிலைய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி, மின் உற்பத்தியை மிகவேகமாக தொடங¢கவேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின¢ உற்பத்தியை உடனடியாக தொடங்கவேண்டும். உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங¢கள், வெளிமாநிலத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்க அனுமதி அளிக்க வேண்டும். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் 28ம் தேதி பேரணி நடத்தப்படவுள்ளது.  பேரணி அரசுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 3 November 2012

பாதியில் நிற்கும் சுரங்க பாலம் பணிநீர் தேங்காமல் இருக்க தடுப்பு சுவர்


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த பழைய சுரங்க பாலத்தை இடித்து விட்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக சுரங்க பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. கூடுதல் நீளத்தில் பாலம் அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கால்நடைத்துறையிடம் இருந்து நிலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பாலம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மழைநீர், பாலத்துக்குள் தேங்கி, துர்நாற்றம் ஏற்பட்டு வந்ததோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்தது. மாநகராட்சி சார்பில் கழிவு நீர் அகற்றப்பட்டது. அப்போது, இனி, தண்ணீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"சுரங்க பாலம் கட்ட அனுமதி கிடைக்கும் வரை, பாலத்துக்குள் தண்ணீர் செல்லாதவாறு தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் மற்றும் மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் குழாய் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்