போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 26 June 2013

முறைகேடாக மின்சாரம் பயன்பாடு: பறக்கும் படையினர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில், மின்வாரிய பறக்கும் படையினர் நடத்திய ஆய்வில், புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்துக்கு 3.58 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்துவதை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் வகையில், மின் வாரிய பறக்கும் படை மற்றும் முன்னாள் ராணுவத்தினரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கே தெரியாமல், திருப்பூரில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய ஆய்வில், மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே, புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்து 10 கிலோ வோல்ட் வரை முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை கண்டறிந்து, மூன்று லட்சத்து 58 ஆயிரத்து 934 ரூபாய் அபராதம் மற்றும் 40 ஆயிரம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் வணிக மின் இணைப்பு பெற்று, வீடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.


பறக்கும் படையினர் கூறியதாவது: திருப்பூரில் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாய நிலத்தில் வீடுகளை கட்டி, வாடகைக்கு விட்டுள்ளதோடு, இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இலவச மின்சாரத்தை பயன்படுத்தி, தண்ணீர் எடுத்து விலைக்கும் விற்று வருகின்றனர்; மின்சார திருட்டுக்களும் நடந்து வருகின்றன. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், அபராதத்துடன், கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஆய்வுக்குச் செல்லும் பெரும்பாலான பகுதியில், வணிக மின் இணைப்பு பெற்று, "டேரிப்' மாற்றம் செய்யாமல், வீட்டுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இது, மக்களுக்கு வீண் செலவு என்றாலும், புதிய மின் இணைப்பு பெறுவது சிரமம் என்பதால், மாற்றவில்லை என கூறுகின்றனர். இணைப்பு "டேரிப்'பை மாற்றிக்கொள்ளுமாறு, அவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு, பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment