போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 10 June 2013

திருப்பூரில் தரைமட்ட பாலம் அமைப்பதை எதிர்த்து வழக்கு

திருப்பூரில் தரைமட்ட மேம்பாலம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லோக் சத்தா கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் செ. ஈஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஊத்துக்குளி - திருப்பூர் ரயில்வே பாதையில் ராமகிருஷ்ணாபுரம், கொங்கு நகர் ஆகிய இடங்களில் இரண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் 2010-இல் மாற்றப்பட்டு வாவிபாளையம் சாலை அருகில் ஒரு மேம்பாலமும், டி.எம்.எப். மருத்துவமனை அருகில் ஒரு தரைமட்டப் பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்டு வரும் தரைமட்டப் பாலம் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதற்கான அணுகுசாலை நெரிசல் மிகுந்த மிகுந்த குமரன் சாலையுடன் இணைகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் இரு மடங்காகி திருப்பூர் நகரமே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஏற்கெனவே 2007-இல் திட்டமிட்டபடி மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர், இது குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாநகராட்சி ஆணையர், நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment