போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 17 March 2013

மின் இணைப்பை விரைவாக வழங்கணும்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு


திருப்பூர்:"வறட்சியை சமாளிப்பதற்காக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, விரைவாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில்தான் குறைவான மழை பெய்துள்ளது. பருவ மழை பொய்த்ததால், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. வறட்சியை சமாளிக்கவும், கோடை வெயிலில் தடையில்லா குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மொத்தம் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வினியோக பணிகளை மேற்கொள்ள <முடிவு செய்யப்பட்டது. குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் கிராமங்களில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, அதன்மூலமாக தண்ணீர் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது.


ஒவ்வொரு ஒன்றியமும், பொதுநிதியை பயன்படுத்தி குடிநீர் வினியோக பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைத்து, மோட்டார் பொருத்திய பிறகும், அதற்கான மின் இணைப்புகளை வழங்குவதில், மின்வாரியத்தினர் தாதம் ஏற்படுத்தி வருகின்றனர். "மின்வாரிய தாமதத்தால், மக்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிப்பதில்லை,' என உள்ளாட்சி பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சண்முகம் கூறியதாவது:

பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்து, 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. சில ஊராட்சிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் முடித்த நிலையில், மின் இணைப்பு பெறுவதற்காக, ஒப்பந்ததாரர்கள் நடையாய் நடக்கின்றனர்."ஊராட்சிகள் மற்றும் ஒன்றியங்களுக்கு எவ்வளவு பாக்கி இருந்தாலும், குடிநீர் தேவைகளை கருத்தில்கொண்டு, ஆழ்குழாய் கிணறுகளுக்கு போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும்,' என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதனால், கடந்த சில நாட்களாக மின் இணைப்பு விண்ணப்பங்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

No comments:

Post a Comment