போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 26 May 2013

மின்வெட்டு நேரம் குறைந்தும் பயனில்லை : தாழ்வழுத்த மின் சப்ளையால் அவதி


திருப்பூர்:காற்றாலை மின்சாரம் கை கொடுப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், மின்னழுத்தம் குறைவு காரணமாக, கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின் உபகரணங்கள் பழுதாவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் நிறுவனங்கள், ஆயில், அரிசி, இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், வணிகம் மற்றும் வீட்டு மின் இணைப்புகள் என ஐந்து லட்சம் இணைப்புகள் வரை உள்ளன. தினமும் சராசரியாக 500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தொழில் துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.கடந்த இரு வாரங்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கிடைப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்கள் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. தொழில் துறையினரும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இயந்திரங்களை இயக்கமுடியாமல், ஜெனரேட்டர்களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினரும், வீடுகளில், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்களும் தெரிவித்தனர். "பீக் அவர்ஸ்' எனப்படும், மாலை 6.00 முதல் 9.00 மணி வரை, மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே சப்ளையாகிறது; அதனால், மின் உபகரணங்கள் பழுதாகி வருகின்றன.

மின்வாரியத்தினர் கூறியதாவது:காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரம் நிலையில்லாமல் உள்ளதே, தாழ்வழுத்த மின்சாரம் சப்ளையாவதற்கு காரணம். உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்சாரத்தை, சீராக வழங்குவது துணை மின் நிலையங்களின் பணி, அங்கு, "டேப்செட்டிங்ஸ்' எனப்படும், தானியங்கி அமைப்பு, மின்சாரத்தை சீராக வழங்கும் பணியில் ஈடுபடும். இடைவெளி, ஓரளவு வரும்போது இந்த அமைப்பு செயல்படும். தற்போது, தாழ்வழுத்த மின்சாரம் மட்டுமே வருவதால், இந்த அமைப்பு செயல்பட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது."மேனுவல்' முறைக்கு மாற்றும்போது, ஏற்றத்தாழ்வு உருவாகும்போது, கார்பன் காஸ் உருவாகி, டிரான்ஸ்பார்மர் பாதிக்கும். இதனால், ஆட்டோமேட்டிக் அமைப்பு 
மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒரு துணை மின் நிலையத்துக்கு, கடந்த சில நாட்களாக சராசரியாக வந்த மின்சாரத்தை அளவிட்டு, "மேனுவல்' முறைக்கு மாற்றலாம். இதுகுறித்து உயரதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும். இது, திருப்பூரில் மட்டும் உள்ள பிரச்னை அல்ல; மாநிலம் முழுவதும் உள்ள பிரச்னை, என்றனர்.மேற்பார்வை பொறியாளர் நிர்மலதாவிடம் கேட்ட போது, ""காற்றாலை மின்சாரம், சீராக கிடைப்ப தில்லை; துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, விரைவில் சீராக மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.சில நாட்கள் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. தொழில் துறையினரும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், சில நாட்களாக தாழ்வழுத்த மின்சாரம் சப்ளையாவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment