போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 20 October 2012

திருப்பூரில் மின்வெட்டை கண்டித்து பாத்திர உற்பத்தியாளர்கள் "ஸ்டிரைக்'

திருப்பூர்:தொடர் மின்வெட்டை கண்டித்து, திருப்பூர் அனுப்பர்பாளையம் அனைத்து பாத்திர உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடந்தது. கறுப்புக்கொடியுடன் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் அருகே 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர், ஆத்துப்பாளையம், தண்ணீர் பந்தல், அங்கேரிபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தொழிலை நம்பி, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.பாத்திர உற்பத்திக்கு தேவையான தகடுகளை "கட்டிங்' செய்வது, உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரத்திற்கு "பாலீஸ்' போடுவது, பாத்திரங்களை இணைக்க "வெல்டிங்' செய்வது என 90 சதவீத உற்பத்திக்கு மின்சாரம் அவசியமாகிறது. 

தற்போது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. வேலை நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. இதனால், 90 சதவீதம் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரை பயன்படுத்தி பாத்திர உற்பத்தி செய்தால், நாளொன்றுக்கு 1,300 ரூபாய் வரை செலவாகிறது. அதனால், பலர் பட்டறையை மூடியுள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அதனால், தொடர் மின்வெட்டை கண்டித்தும், சீராக மின்சாரம் வழங்கக்கோரியும், அனைத்து பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. அனைத்து பட்டறைகளும் மூடப்பட்டன. இவர்களுக்கு ஆதரவாக பாத்திரக்கடை, மளிகை கடை, இரும்பு கடை, ஜவுளி கடை, பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

போராட்டத்தையொட்டி, காலை 10.00 மணிக்கு, பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர், அனைத்து கட்சியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து, கறுப்புக்கொடி பிடித்து அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்து ஊர்வலமாக மின்வாரிய அலுவலகம் செல்ல முற்பட்டனர். மின்வாரிய அதிகாரியை, இங்கு வரவழைக்கிறோம். ஊர்வலமாக செல்லக்கூடாது என போலீசார் கூறினர். போலீசாரை கண்டித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, சம்பவ இடத்திற்கு வந்தார். "உங்கள் கோரிக்கைகளை உயரதிகாரிகளிடம் கூறி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறினார். அதன்பின், மறியலை கைவிட்டு ரோட்டோரத்தில் கண்டன கூட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.வேலை நிறுத்த போராட்டத்தால், அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திர உற்பத்தியும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிற வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment