போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 10 October 2012

மின்சாரம் தயாரிக்க "நமக்கு நாமே' திட்டம்:திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு முயற்சி


திருப்பூர், : கடும் மின்வெட்டால் முடங்கியிருக்கும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நமக்கு நாமே மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன் வைத்து அதற்கான பூர்வாங்க முயற்சியில் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஈடுபட்டுள்ளது.
 பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. மாநிலத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் இந்தத் தொழிலை சார்ந்துள்ளனர்.
 பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டுவரும் பின்னலாடைத் தொழில்துறைக்கு, மின்வெட்டு பிரச்னை பேரிடியாக உள்ளது. மின்சாரத்துக்காக அரசை நம்பி பயனில்லை. அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்வது தான் எதிர்கால நலனுக்கு நன்மை பயக்கும் என்ற சிந்தனையை விதைக்கும் முயற்சியில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 இதற்காக பல்வேறு தொழில் அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகளின் ஆலோசனைகளைப் பெற இக்குழு முயற்சி எடுத்து வருகிறது.
 இதுகுறித்து தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியது: 
 மின்வெட்டு பிரச்னைக்காக போராட்டங்கள் நடத்துவதில் எந்தவித பலனும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இப்பிரச்னை நீங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கும். அரசை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வதுதான் எதிர்காலத்துக்கு நன்மை தரும்.
 மாநகருக்கு ஒட்டுமொத்தமாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக, சூரிய சக்தி மின்சாரத்தை இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்துகொள்ளும் திட்டத்தை தொழில் பாதுகாப்புக் குழு முன் வைக்கிறது.
 சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரம் அல்லது இருவகையிலும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வது போன்ற சாத்தியக்கூறுகள் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் ஆலோசனைக்கு முன் வைக்கப்படுகிறது.
 சூரிய சக்தியில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.7 கோடி முதலீடு வீதம், 200 மெகாவட் மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதுடன், ரூ.1,100 கோடி செலவு ஏற்படும்.
 இதில், 75 சதவீதம் வங்கிக் கடன் பெற இயலும். திருப்பூர் தொழில்துறையினர் ரூ.300 கோடி வரை முதலீடு செய்ய வேண்டும். இதற்காக புறம்போக்கு இடத்தை அரசு வழங்க வேண்டும். சிறிய அளவில் 25 கிலோ வாட் மின்சார உற்பத்திக்கு ரூ.30 லட்சம் தேவைப்படும்.
 இதுபோன்ற சிறிய அளவிலான சூரிய சக்தி மின்சார உற்பத்தியை, தனிப்பட்ட முறையில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிறுவனங்கள் அமைத்துக்கொள்ளலாம். ரூ.1.5 லட்சம் செலவில்கூட ஒரு கிலோ வாட் மின்சாரத்தை வீடுகளில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
 இதற்காக, சூரிய சக்தி மின்சார பிளான்ட் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம். தனி நபர்கள், சூரிய சக்தி மின்சார பிளான்ட்டுகள் அமைப்பதன் மூலமாக 100 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும்.
 மற்றொரு பகுதி 100 மெகாவாட் மின்சாரத்தை பொதுவான முறையில் உற்பத்தி செய்யலாம். இந்த முறையில் 100 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு 500 ஏக்கர் நிலம், ரூ.600 கோடி முதலீடு தேவைப்படும். இது சாத்தியமான திட்டம் தான்.
 சூரிய சக்தி மின்சாரம் மூலமாக, காலை 6 முதல் மாலை 6 மணி வரை தடையில்லா மின்சாரம் கிடைக்கும். அரசிடம் மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. டீசல் செலவு ஏற்படாது.
 இந்த முயற்சி வெற்றி பெறும்போது, 25 ஆண்டு காலத்துக்குத் தேவையான மின்சாரத்தை நமக்கு நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்றார்.

1 comment:

  1. மிகவும் நல்ல முயற்சி வரவேற்கிறோம். எங்களால் ஆன உதவி செய்வோம். எப்படி சூரிய சக்தியை என்ன செலவில் செயல் படுத்தலாம் என்பதை காண எனது முக நூலினைக் படிக்கவும். பள்ளிகூடன்ங்களில் ஆரம்பித்து இளம்தலைமுறையினரை இது பற்றி அறியவைத்துக்கொண்டு முன்னேறவேண்டும். வாழ்த்துக்கள். https://www.facebook.com/kanaga.gnana

    ReplyDelete