போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 7 September 2012

ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்புசேவை திட்டத்தில் சேர அறிவுரை


திருப்பூர்: ""ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் சேர வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம்,'' என வருங்கால வைப்பு நிதி நிறுவன மாவட்ட செயல்பாட்டு அதிகாரி ஆல்பர்ட் தெரிவித்தார்."சேவ்' அமைப்பு சார்பில் "இளம்பெண் தொழிலாளர் வாழ்நிலை' கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று நடந்தது. இயக்குனர் அலோசியஸ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் வியாகுலமேரி வரவேற்றார்.
தொழிலாளர் காப்பீடு திட்டம் குறித்து, இ.எஸ்.ஐ., அலுவலக அதிகாரி விஜயகுமார் பேசுகையில், ""தொழிலாளர் அனைவரும் அவசியம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். சில தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அங்கும் சிகிச்சை பெறலாம். மாதச்சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் தொழிலாளர் மட்டுமே சேர முடியும். பணியில் இருக்கும்போது தொழிலாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் வழங்கப்படும்,'' என்றார்.வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி, மாவட்ட செயல்பாட்டு அலுவலர் ஆல்பர்ட் பேசுகையில், ""தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வைப்பு நிதி (பி.எப்.,) அடிப்படை சட்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, முதியோரை குடும்பத்தில் உள்ளவர்கள் கவனித்து வந்தனர். தனி குடும்பமாக வந்தபின், முதியோரை யார் காப்பது என்ற நிலை உருவாகும். அதனால், சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் நாம் சேர வேண்டும். 
இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம். தொழிலாளியிடம் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப் படுகிறதோ, அதே அளவு தொகையை கம்பெனியும் செலுத்தும். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணம் செலுத்திய பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையை கடனாகவும், படிப்பு செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் எடுக்கலாம். இதில் சேர்ந்த ஒருவர், பணி காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் 
வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெற இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியும் பி.எப்., திட்டத்தில் சேர வேண்டும்,'' என்றார்.தொழிலாளர் நலச்சட்டம் பற்றி தொழிலாளர் அலுவலர் பழனிச்சாமி பேசினார். குறும்பட இயக்குனர் ஜோபிரகாஷ் எடுத்த "நல்லதோர் வீணை செய்தே' என்ற குறும்பட தகடு வெளியிடப்பட்டது. "சேவ்' கள ஒருங்கிணைப்பாளர் பரிமளச்செல்வி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment