போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 24 September 2012

திருப்பூர் : ரயில்வே கேட் மூடி பத்து நாளாச்சு :பணிகள் துவங்காததால் அவதி


திருப்பூர் : சுரங்க பாலம் கட்டுமான பணிக்காக, ரயில்வே கேட் மூடப்பட்டு, பத்து நாட்களாகியும் பணிகள் துவங்காமல் உள்ளது.

             திருப்பூர் நகர் மத்தியில் ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. அடிக்கடி கேட் மூடப்படுவதால், சமயங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காத்திருந்து அவதிப்படுகின்றனர். அதனால், 20 கோடி ரூபாய் மதிப்பில் பிரிட்ஜ் வே காலனி பகுதியில், கனரக வாகனங்களுக்கான சுரங்க பாதையும், கார், இரு சக்கரம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான ஒரு சுரங்க பாதையும் அமையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.முதல் ரயில்வே கேட்டுக்கு மாற்றாக, கொங்கு மெயின் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள இலகுரக வாகனங்களுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணியை ஒன்றரை ஆண்டு இழுபறிக்கு பின் தற்போது துவக்க திட்டமிடப்பட்டது. பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.


               சுரங்க பாலம் கட்டுமான பணிக்காக, கடந்த 14ம் தேதி, முதல் ரயில்வே கேட் மூடப்பட்டது. இரண்டாவது ரயில்வே கேட் மற்றும் ஒன்றைக்கண் பாலம் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. கேட் மூடப்பட்டு, பத்து நாட்களாகியும் இதுவரை பணிகள் துவங்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்களை பத்து அடி தூரம் வரை மாற்றி அமைக்க வேண்டும்."ரயில்வே துறை அதிகாரிகள் அளவீடு செய்து தந்தால்தான், பணி மேற்கொள்ள முடியும்,' என மாநகராட்சி அதிகாரிகளும், "ஒரு பகுதியில் அளவீடு செய்து தரப்பட்டுள்ளது,' என ரயில்வே துறை அதிகாரிகளும் மழுப்பி வருகின்றனர். இரு துறை அதிகாரிகளும், மாறி மாறி காரணம் கூறி, பணியை துவக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
"பணி துவங்கும்போது போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாகவும், மாற்று வழித்தடத்தையும், போக்குவரத்து மாற்றத்தையும் முறைப்படுத்த வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், கேட் மூடப்பட்டு பத்து நாட்களாகியும் பணியை துவங்கவில்லை. சுரங்க பாலம் கட்டுமான பணியை உடனே துவக்க வேண்டுமென்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment