போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 27 September 2012

திருப்பூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலிஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

      திருப்பூரில் மின்வாரிய ஊழியருக்கு உதவியாளராக இருந்த ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் அருகே பெருமாநல்லூர், பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் திருமால்; இவரது மக  ன் பெருமாள், 25. பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் "லைன்மேன்'களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, காளிபாளையம் ஊராட்சியை அடுத்த பண்ணை தோட்டம் பகுதியில் மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் ஒயர் அறுந்து கிடந்தது. அதை சரி செய்ய சென்றுள்ளார். மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில்,மின் சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பெருமாள் இறந்தார்.பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த பெருமாள் உறவினர்கள், நண்பர்கள் என 150 பேர், நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தனர்."மின்வாரியத்தினர் நிவாரணம் வழங்க வேண்டும்; இல்லையெனில், உடலை வாங்கிச் செல்ல முடியாது,' என்று கூறி கோஷமிட்டனர்; பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட் டனர். உறவினர்கள், தாராபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.உறவினர்கள் தரப்பில், "பெருமாள், மின்கம்பத்தில் ஏறியது தெரிந்தே மின்வினியோகம் செய்துள்ளனர். அவரது உயிருக்கு பதில் சொல்ல வேண்டும். அவரது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்,' என கோஷம் எழுப்பினர்.சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., ராஜாராம், ""மறியல் செய்ய வேண்டாம்; பேசி தீர்த்துக் கொள்ளலாம்,'' என அழைத்தார். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து அரசு மருத்துவமனைக்குள் சென்றனர். அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் பேச்சு நடத்தினர். "திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, உடன் பணியாற்றும் ஊழியர்களே மறுக்கின்றனர். பெருமாநல்லூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்,' என வாதிட்டனர்.போலீசார் தரப்பில், "விசாரணை நடந்து வருகிறது. அதற்கு முன் எதையும் தெரிவிக்க முடியாது. உங்கள் கோரிக்கையை ஏற்று, வழக்கில் பிரிவுகளை மாற்றுகிறோம். விபத்து வழக்காக விசாரிக்கப்படும்,' என்றனர். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர்.இது, இரண்டாவது!திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், 618 "ஒயர்மேன்' பணியிடங்களில், 22 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; 596 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், 619 "ஹெல்ப்பர்' பணியிடங்களில், 195 பேர் மட்டுமே உள்ளனர்; 424 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு "ஒயர்மேன்' மற்றும் "ஹெல்ப்பர்' இணைந்து, ஒரு யூனிட் (8+5 என 13 டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் இணைப்புகள்) பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இருவரும் தனித்தனியாக பணியில் ஈடுபடக்கூடாது. ஆனால், 90 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஒருவரே, பல யூனிட்களை கவனிக்க வேண்டியுள்ளது.இதனால், ஒவ்வொரு ஒயர்மேனும் தங்களுக்கு கீழ், 4 முதல் 10 பேர் வரை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கணக்கிலேயே வராமல், உதவியாளாராக வைத்துக் கொள்கின்றனர். பியூஸ் போடுவது, இணைப்பு வழங்குவது உள்ளிட்ட ஒவ்வொரு சேவையின் போதும், நுகர்வோரிடம் இருந்து, கணக்கில் வராமல் குறிப்பிட்ட தொகை வசூலித்து, ஊதியமாக வழங்கி வருகின்றனர்.வாரியத்துக்கு சம்மந்தமே இல்லாத இவர்கள், சமீபகாலமாக, மின் பணியின்போது விபத்து ஏற்பட்டு இறக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. கோவை மண்டலத்தில், கடந்த எட்டு மாதங்களில் எட்டு பேர் இவ்வாறு பலியாகியுள்ளனர். கடந்த மாதம், திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில், ஒயர்மேனுக்கு உதவியாளராக இருந்த ஞானவேல் பலியானார். நேற்று, பெருமாநல்லூர் பெருமாள் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி கூட கிடைக்க வழியில்லாமல் போய்விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, காலியிடங்களை உடனடியாக நிரப்ப மின்வாரியம் முன்வர வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment