போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 27 September 2012

திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வார மின் விடுமுறை:விரைவில் அமலுக்கு வருகிறது

திருப்பூர் :தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை; "பீக் ஹவர்ஸில்' மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தின் தினசரி மின் தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது; தற்போது 8,500 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதால், தினமும் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மின்வாரியம் எடுத்து வருகிறது.
ஆலை மின் இணைப்பு வழங்கும்போதே, "ஞாயிறுதோறும் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது; "பீக் ஹவர்ஸ்' மாலை 6.00 மணியளவில் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது' என்ற விதியின் அடிப்படையில் இணைப்பு வழங்கப்படுகிறது.மின் பற்றாக்குறை அதிகரித்த நேரத்தில், தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒருநாள் மின் விடுமுறை அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் முன்னதாகவே மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. மே மாதம் இறுதியில் காற்று சீசன் துவங்கி, காற்றாலைகள் வாயிலாக மின்சாரம் உற்பத்தியானதால், பற்றாக்குறை குறைந்தது. திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைமுறையில் இருந்த மின் விடுமுறை நீக்கப்பட்டது.இந்நிலையில், மீண்டும் மின் பற்றாக்குறை அதிகரித்து, தினமும் பகலில் எட்டு முதல் பத்து மணி நேரமும், இரவில் எட்டு மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், மீண்டும் மின் வெட்டு நேரம் குறித்து முறையாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் "பீக் ஹவர்ஸ்'களில் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது; வாரத்தில் ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை ஆகியவற்றை பின்பற்றவும், வார மின் விடுமுறையை மீண்டும் அமல்படுத்தவும் மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.அதிகாரிகள் கூறுகையில், "மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அரசுடன், மின்வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாளில், வார மின் விடுமுறை உள்ளிட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்படும்,' என்றனர்.

No comments:

Post a Comment