போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 7 September 2012

திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,


திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,' என, திருப்பூரில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.கொச்சின் - பெங்களூரு இடையே காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில், விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகளுடன் கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. இதுவரை தீர்வு ஏற்படவில்லை.கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி முன்னிலை வகித்தார். "கெய்ல்' நிறுவனம் சார்பில் மூத்த திட்ட மேலாளர் அங்கமுத்து, திட்டம் குறித்து விளக்கினார். விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு அளித்த மனுவுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எழுதிய பதில் வாசிக்கப்பட்டு, அதன் நகல் வினியோகிக்கப்பட்டது.அதில், "குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படாது;
முன்னர்போல், நிலம் திரும்ப வழங்கப்படும்; நிலம் ஆர்ஜிதம் செய்யப்படாமல், அதை பயன்படுத்த உரிய நிவாரணம் வழங்கப்படும். குழாய் சேதமடைந்தால், சம்பந்தப்பட்ட விவசாயி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாற்றுப்பாதையாக என்.எச்., ரோடு, ரயில்வே லைன் வழியாக கொண்டு செல்வதில் பாதுகாப்பு குறை, பராமரிப்பு சிரமம். கூடுதல் செலவு ஆகிய காரணங்கள் உள்ளன,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
மாற்றுப்பாதைக்கு கூடுதல் செல
வாகும் என்று விவசாய நிலத்தை தேர்வு செய்துள்ளனர். ஆரம்பம் முதல் நாங்கள் இதை எதிர்க்கவில்லை. மாற்றுப்பாதை குறித்து இதுவரை ஒரு அடி கூட அதிகாரிகள் சிந்திக்கவில்லை. நிலம் பாதிப்பு, விவசாயத்துக்கு மீண்டும் பயன்படுத்த முடியாதது; நிலம் பரிவர்த்தனை செய்தல், மரம் வளர்த்தல், ஆழ்குழாய் கிணறு, கட்டடம் என எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்துகளை மறைத்து, அமைச்சரிடமும், கலெக்டரிடமும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. கிராம சபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.கேரளாவில் கிளம்பிய எதிர்ப்பால் 93 கி.மீ., காஸ் குழாய், மாற்றுவழியில் 43 கி.மீ., அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் போட்ட திட்டங்களை இதுவரை மூன்று முறை மாற்றியுள்ளனர். பொது அறிவிப்பு குறித்து தகவல் தர மறுக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் முடித்தால் போதும் என கலெக்டரிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், இதற்கு அனுமதிக்கக் கூடாது. தங்கள் நிலத்தில் காஸ் குழாய் பதிக்க, விவசாயிகள் 200 சதவீதம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீறினால், விளைவுகள் 
விபரீதமாக இருக்கும் என்பதை உணர வேண்டும்.
இன்று பொதுத்துறையாக உள்ள "கெய்ல்', நாளை தனியாருக்கு போய்விட்டால் விவசாயிகள் நிலை என்னாகும்? இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து விளக்கம் தர வேண்டாம். தகவல் 
கேட்டால் அதிகாரிகள் மதிப்பதில்லை; தகவல் அளிப்பதில்லை.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.கலெக்டர் மதிவாணன் பதிலளிக்கையில், ""விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்

No comments:

Post a Comment