போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 24 August 2012

கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? டெய்லி 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!

திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
குறிப்பாக தொழில் நகரான திருப்பூரிலும் மின்வெட்டு வெளுத்து வாங்கி வருவதால் தொழில் நிறுவனங்கள் பெரும் கடுப்பாகிக் கிடக்கின்றன.

காலை 6 மணிக்கு மின்சாரம் தடைபட்டால் 9 மணிக்குத்தான் வருகிறது. அப்புறம் 10 மணிக்கு போய் 11 மணிக்கு வருகிறது. பின்னர் 12 மணியில் 2 மணிவரை மின்தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் 2 மணியில் இருந்து மாலை 6 மணிவரை அப்பாடா என்று நிம்மதியாக வேலை பார்க்கலாம். மீண்டும் இரவு 6 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் பவர்கட் ஆகிவிடும். அவசரமாய் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு படுக்கலாம் என்று போனால் 10 மணிமுதல் 11 மணி வரை கரண்ட் இருக்காது.
நள்ளிரவில் 12.30 மணிக்கு போய் 1.30 மணிவரைக்கும். 3.30 மணிக்கு போய் 4.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைபட்டு தூக்கத்தை சாப்பிட்டு விடும். மொத்தத்தில் ஒருநாளைக்கு பத்துமணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. அதிகாலையில் அப்பாடா என்று அசந்து தூங்க முடியாது. ஏனென்றால் வீட்டு வேலைகளை செய்யாவிட்டால் அப்புறம் 6 மணிக்கு கரண்டு போய்விடுமே என்று அரக்க பரக்க எழுந்திருத்து வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள் இல்லத்தரசிகள்.
இல்லத்தரசிகளுக்கு இந்த சிக்கல் என்றால் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்படும் பிரச்சினை மிகப்பெரியது. திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அரசாங்கம் வழங்கும் மின்சாரத்தை நம்பியே இருக்கின்றனர். அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள்.
மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மின்தடை 9 மணிநேரம் என்றால் அறிவிக்கப்படாமல் பலமணிநேரம் மின்சாரம் தடை படுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர் மக்கள். கப்பலூர் தொழிற்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்திலும் இதே நிலைதான். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டு வரும்மின்தடையினால் வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இங்கு தினசரி 3 மணிநேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
பருவமழை பொய்த்துப்போனதால் நீர் மின்திட்டங்களுக்கும் வழியில்லை. காற்றாலைகளும் கைவிட்டுவிட்டன. மின் தட்டுப்பாட்டை போக்க இனி என்ன செய்வது என்று தெரியாமல் ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். மின்தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, இன்னும் 6 மாதத்தில் சரியாகிவிடும், இன்னும் 10 மாதத்தில் சரியாகிவிடும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். கரண்டு எப்போ போகும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர் இனி கரண்ட் எப்போ வரும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

No comments:

Post a Comment