போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 4 August 2012

மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி : தொடர்கிறது, குழந்தை தொழிலாளர் முறை


திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கடை கள், வர்த்தக நிறுவனங்களில் குழந்தைகள் பணியாற்றுகின்றனரா என ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர் கண்காணிப்பையும் மீறி, குழந்தைகளை தொழிற்சாலைகளில் பணிக்கு அமர்த்துவதால், நடவடிக்கையை 
கடுமையாக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் பகுதி, பனியன் தொழிலுக்கும்,சுற்றுப்பகுதிகள், நூல் மில் மற்றும் விசைத்தறி தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வறுமை காரணமாக, சிலர், தங்களது குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றனர். சிறு வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்கள், கல்வியை இழப்பதோடு, எதிர்காலத்தையும் சேர்த்து தொலைத்து விடுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தேசிய குழந்தை தொழில் ஒழிப்பு திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திட்ட அலுவலர்கள், வருவாய்த்துறை, தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை, மருத்துவ துறை மற்றும் போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, பகுதி வாரியாக தொழிற்சாலைகள், மில்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தப்படுகிறது.ஆய்வில், 14 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களை பணி அமர்த்துவது கண்டறியப்பட்டால், அவர்களை மீட்டு, சிறப்பு பள்ளி அல்லது முறையான பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்குற்றத்துக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும்.
இக்கமிட்டி ஆலோசனை கூட்டம், மாதந்தோறும் நடக்கிறது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு குழுவுக்கு அடுத்தபடியாக, விரைந்து பணியாற்றும் வகையில் தாலுகா அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டன. தாலுகா வாரியாக அமைக்கப்பட்ட குழுக்கள், கடந்த ஒரு மாதத்தில் பல பகுதி
களில் ஆய்வு நடத்தின. இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 23 பேர் குழந்தை தொழிலாளர்கள்.
கடந்த 23ம் தேதி, திருப்பூரில் இரண்டு பனியன் நிறுவனங்களில் மீட்கப்பட்ட 12 பேரில் 9 பேரும், நேற்றுமுன்தினம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள ஒரு மில்லில் மீட்கப்பட்ட 14 பேரில் 7 பேரும் குழந்தை தொழிலாளர்கள் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 23 ஆக உள்ளதுகுழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் வேளையில், இதுபோன்ற சம்பவங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் மறையவில்லை என்பதையே காட்டுவதாக உள்ளது. இது, அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தை தொழில் ஒழிப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆய்வு நடந்தது. மீட்கப்பட்ட 10 சிறுவர், 13 சிறுமியரில், திருப்பூரை சேர்ந்த 3 பேரும், தாராபுரத்தில் ஒரு சிறுவனும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 15 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தரப்பட்டுள்ளது. பணி அமர்த்திய நிறுவனங்கள் மீது தொழிற்சாலை துறையினர், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர், என்றார்.


கொத்தடிமையாக நடத்த முயற்சியா?



                         பெற்றோரிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, பீகாரில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்பட்ட 16 சிறுவர்களை வடக்கு போலீசார் நேற்றிரவு மீட்டனர்.பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண் மற்றும் சஞ்சய் ஆகியோர், திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்து வரும் புரோக்கர்களான இவர்கள், வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த 16 சிறுவர்களை, திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். பெற்றோர்களிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, திருப்பூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சென்னை - மங்களூரு ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.54 மணிக்கு, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கி, காதர்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமண் என்பவர் அறையில் 16 சிறுவர்களையும் தங்க வைத்துள்ளனர். திருப்பூரில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, அதன் மூலமாக வருவாய் பெறவும் புரோக்கர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்."பேச்பன் பேச்சோ ஆன்டோலென்' என்ற, பீகாரில் உள்ள குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பு, திருப்பூரில் உள்ள கிளை நிர்வாகிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் கொடுத்த புகார் அடிப்படையில், திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த 16 சிறுவர்களையும் அழைத்து வந்தனர். அவர்களில், ஒன்பது பேர் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதும், ஏழு பேர் 15 வயதுக்கும் அதிகமானர்வர்கள் என்பதும் தெரியவந்தது."பெற்றோரிடம் காசு கொடுத்து அழைத்து வந்து, திருப்பூரில் கொத்தடிமைகளாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கொத்தடிமைகள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், போலீசிடம் வலியுறுத்தி உள்ளனர். 16 பேரையும் மீட்டு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட புரோக்கர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment