போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 2 August 2012

பனியன் உற்பத்தி பணிகளுக்கு தொழிலாளர்கள் இல்லாததால் தொழில் துறையினர் கவலை

பனியன் உற்பத்தி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்திக்க தொடங்கியது. நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளை தாண்டி கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ந்தேதி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திருப்பூரில் பூஜ்ய சதவீத முறையில் சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாத சாயப்பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வெளியிடங்களை நோக்கி திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் செல்லத்தொடங்கினர்.
சாய,சலவைப்பட்டறைகள் மூடப்பட்டபின்னர் அதை நம்பியிருந்த பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் மெல்ல, மெல்ல ஆர்டர்கள் இல்லாமல் வேலை இன்றி காணப்பட்டன. இதனால் தொழிலாளர்களுக்கு ஷிப்டு முறை பணிகள் குறைந்தன. தங்களுக்கு தேவையான கூலியை பெற முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
மேலும் இந்த ஆண்டில் தொடர் மின் தடை, மின் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சோதனையாக அமைந்தன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆர்டர்கள் வரத்து குறைந்தது. இதனாலும் பின்னலாடை உற்பத்தி பணிகள் குறைந்தன. கடந்த ஆண்டை விட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடை ஏற்றுமதி குறைந்தது.
பல்வேறு போராட்டங்களுக்கு இடையிலும், பூஜ்ய சதவீத முறையில் இயங்க தயாராக இருந்த தனி மற்றும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இதனால் அந்த நிலையங்கள் இயங்கத்தொடங்கின.
ஆண்டுதோறும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வழக்கமாக வெளிநாட்டு ஆர்டர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி மற்ற ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை திருப்பூர் தொழில் துறையினர் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூரில் பனியன் உற்பத்தி பணிகள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பனியன் உற்பத்தி செய்ய தற்போது போதிய ஆட்கள் இல்லாததால் திருப்பூர் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், சுமார் 40 சதவீத தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி சென்றுவிட்டனர். பள்ளிகளில் படித்து வந்த தங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழ்களை பெற்று வெளியூர் சென்றுள்ள தொழிலாளர்கள் திருப்பூரில் பல ஆயிரங்களை தாண்டும்.
பனியன் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் கிடைக்காமல் தொழில் துறையினர் தவித்து வருகின்றனர். இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,
தற்போது திருப்பூர் பனியன் உற்பத்தி தொடங்கியுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். பனியன் ஆர்டர்களை குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பவேண்டும். இதற்காக கூடுதல் ஆட்கள் தேவைப்படுகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைய ஆட்கள் தேவைப்படுவார்கள். இதற்காக வெளியூர்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்களை மீண்டும் திருப்பூருக்கு வாருங்கள் என்று மொபைல் போன் மூலம் பேசி வருகிறோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment