போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 17 August 2012

திருப்பூர் உள்ளூர் சேனலில் பல லட்சம் ரூபாய் நிலுவை :வசூல் செய்ய முடியாமல் அரசு கேபிள் திணறல்


திருப்பூர் : உள்ளூர் சேனல் ஒளிபரப்பு செய்த வகையில், பல லட்சம் ரூபாய் அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனுக்கு நிலுவை உள்ளது. அத்தொகையை வசூலிக்கும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறுகிறது.அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம் கடந்தாண்டு அக்., முதல் கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டன. உள்ளூரில் கேபிள் சேனல்கள் ஒளிபரப்பு செய்ய சில நிறுவனங்கள் முன் வந்தன. அரசு வழங்கிய சாட்டிலைட் சேனல்கள் தவிர பகுதி வாரியாக 4 முதல் 10 தனியார் உள்ளூர் சேனல்களுக்கு ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு உள்ளூர் சேனல் ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்ட போது 7 சேனல்கள் ஒளிபரப்பை துவக்கின. கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன், எம்.பி., சிவசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களின் பெயர்களில் சில சேனல்களை துவக்கினர்.

மேலும், கேபிள் ஆபரேட்டர் சங்கங்கள் சார்பில் இரண்டு சேனல்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டன. சேனல் ஒளிபரப்பு துவங்கி பல நாட்களுக்குபின்பே, இதற்கான டெண்டர் நடந்தது. கடந்த நவ., மாதம் நடந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டும் மாதந்தோறும் 6.10 லட்சம் ரூபாய் செலுத்த ஒப்புக் கொண்டன. ஜனவரிக்குப் பின்னரே, இதற்கான அனுமதி வழங்கி, இந்த சேனல்கள் முழு வீச்சில் இயங்கத் துவங்கின. இருப்பினும், டெண்டரில் இணையாத சில சேனல்கள் சோதனை ஒளிபரப்பு என்ற அடிப்படையில் மாதம் 1.10 லட்சம் ரூபாய் செலுத்தி இயங்கின. கடந்தாண்டு நவ., மாதம் நடத்தப்பட்ட டெண்டர் ஏற்கப்படாமல், கடந்த மே மாதம் மீண்டும் டெண்டர் நடத்தப்பட்டது. அதில், முன்னர் உள்ளூர் சேனல் நடத்திய நிறுவனங்கள் வேறு பெயரில் பங்கேற்றன. இரண்டாவது நடந்த டெண்டரில் மாத தொகை 3.03 லட்சம் ரூபாய் என முடிவானது. அதனடிப்படையில், 8 சேனல்கள் அனுமதி பெற்றபன. தற்போது இந்த சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அமைச்சர் ஆனந்தன் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட "ஜாய்' டிவி, தற்போது "ஜெ டிவி' என்ற பெயரிலும், ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் நடத்திய "யு டிவி' தற்போது "ஸ்கை டிவி' என்ற பெயரிலும், எம்.பி., சிவசாமி ஆதரவாளர்கள் நடத்திய "ஸ்மார்ட் டிவி', தற்போது "சிவம் டிவி' என்ற பெயரிலும், கேபிள் ஆபரேட்டர் சங்கம் நடத்திய "டிடிசி டிவி' என்ற சேனல், "என் டிவி' என்ற பெயரிலும் டெண்டரில் பங்கேற்று, ஒளிபரப்பு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. உள்ளூர் சேனல்கள் அனைத்தும், மே மாதம் நடந்த டெண்டருக்கு முன், ஒன்று முதல் மூன்று மாதம் வரை அரசு கேபிள் நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தாமல் உள்ளன. அவ்வகையில், ஏறத்தாழ 30 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகை வைத்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் ஆதரவாளர்களால் இயங்கி வந்தவை. தற்போது அவை வேறு நபர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு, இரண்டாவது நடந்த டெண்டரில் பங்கேற்றுள்ளன. இவை வேறு பெயர்களில் இயங்கி வரும் நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க, மேலிடத்திலிருந்து இதுவரை எந்த உத்தரவும் வராததால், அத்தொகை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது என தெரியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

THANKS  to தினமலர்

No comments:

Post a Comment