போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 25 August 2012

திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிக்க கருத்துரு சமர்ப்பிப்பு உதயமாகிறது


திருப்பூர்:நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பதற்கான கருத்துரு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலம்பாளையம், நல்லூர் பிர்க்காக்கள் உதயமாக உள்ளன.திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பூர் தாலுகா அமைந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், பரவலாகி வரும் குடியிருப்புகள், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்துக்கு உயர்ந்த நிலை என பல தரப்பிலும், இதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


திருப்பூர் தாலுகா அலுவலக நிர்வாகம் துவங்கப்பட்டது முதல், நாளுக்கு நாள் பணிப்பளு அதிகரித்து வரும் நிலையிலும், தொடர்ந்து பெரும் சிரமங்களுக்கு இடையே செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ மூன்று லட்சம் குடியிருப்புகளும், ஏழு லட்சம் மக்கள் தொகையும் கொண்டதாக உள்ளது. இதன் பரப்பளவு 374 சதுர கி.மீ.,திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பிர்க்காக்களும், வடக்கு அவிநாசிபாளையம் பிர்க்காவும் இடம் பெற்றுள்ளன. பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில்களும், பெருமளவு விவசாயமும் தொழிலாக உள்ளன.பல்வேறு தேவைக்காக, திருப்பூர் தாலுகா அலுவலகத்தை தினமும் நூற்றுக்கணக்கானோர் அணுகுகின்றனர். 

ஊழியர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் பணிப்பளு காரணமாக இந்த அலுவலகத்தில் பணிகள் தாமதமாவதும், இதுபோன்ற தாமதங்களால் முறைகேடுகளும் நடப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், தற்போது திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பது குறித்து மாவட்ட 
நிர்வாகம் ஆலோசனை செய்துள் ளது. வருவாய்த்துறை முதன்மை செயலர், துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பூர் வடக்கு பிர்க்காவில் தற்போதுள்ள கிராமங்கள், திருப்பூர் வடக்கு மற்றும் வேலம்பாளையம் என இரண்டு பிர்க்காக்களாக பிரிக்கப்படுகின்றன. வடக்கு பிர்க்காவில், கணக்கம்பாளையம், பொங்கு பாளையம், நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் ஆகிய கிராமங்களும், வேலம்பாளையம் பிர்க்காவில், திருப்பூர் மாநகராட்சியில் நொய்யல் ஆற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள், மண்ணரை, தொட்டிபாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களும் அடங்கும். இவ்விரண்டு பிர்க்காக்களையும் கொண்டு திருப்பூர் வடக்கு தாலுகா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.தெற்கு பிர்க்காவை பிரித்து, நல்லூர், ராக்கியாபாளையம், முதலிபாளையம், முத்தணம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை கொண்டு, நல்லூர் பிர்க்கா அமைக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றின் தெற்கு நகரப்பகுதி, மங்கலம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுடன் திருப்பூர் தெற்கு பிர்க்கா அமைக்கப்படுகிறது.வடக்கு அவிநாசிபாளையம் பிர்க்காவில் தெற்கு மற்றும் வடக்கு அவிநாசிபாளையம் கிராமங்கள், வெள்ளியம்பாளையம், உகாயனூர், கண்டியன்கோவில், தொங்குட்டிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம் மற்றும் அலகுமலை 
உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் கொண்ட பிர்க்காவுடன் மாற்றி அமைக்கப்படும். திருப்பூர் தெற்கு மற்றும் நல்லூர் பிர்க்கா ஆகியவற்றுடன் திருப்பூர் தெற்கு தாலுகாவும் அமைக்கப்படுகிறது.இதற்கான மக்கள் தொகை, பரப்பளவு, வரைபடங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கருத்துரு தயாரித்து, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment