போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 6 August 2012

கோபி அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரி போலீஸ் விசாரணை


கோபிசெட்டிபாளையம்,  அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லாரியை யாராவது கடத்திக்கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேட்பாரற்று நின்ற லாரி


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது மேவாணி. இந்தப் பகுதியில் தேங்காய் மட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கேட்பாரற்று நின்று கொண்டு இருந்தது. தொடர்ந்து, ஒரு மாதமாக ஒரே இடத்தில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர்.

மேலும், அந்த லாரி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து, மர்ம லாரி நிற்பது குறித்து மேவாணி கிராம நிர்வாக அதிகாரி வெங்கட்ராமனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு கிராம நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன் தகவல் கொடுத்தார்.

கர்நாடகா பதிவு எண்

அதன்பேரில், கோபிசெட்டிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையின் ஓரத்தில் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த லாரி கர்நாடகா பதிவு எண் கொண்டது என்பது தெரியவந்தது.

அந்த லாரியின் உரிமையாளர் யார்? லாரியின் டிரைவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. மேலும், லாரியின் சாவி அங்கேயே இருந்தது. அதைத்தொடர்ந்து, அந்த லாரியை கைப்பற்றிய போலீசார் மற்றொரு டிரைவர் மூலம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கடத்தி வரப்பட்டதா?

கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் எங்கே சென்றார்?, அந்த லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு மாதமாக லாரியை உரிமை கொண்டாடி இதுவரை யாரும் வராததால், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியை வெளிமாநிலத்தில் இருந்து மர்ம மனிதர்கள் யாராவது கடத்திக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரியால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment