போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 17 August 2012

சிவன்மலை கோவிலில் தண்ணீர் வைத்து பூஜை: பருவமழை மீண்டும் கை கொடுக்குமா?


காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பக்தர் கனவில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்ததால், சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், பருவமழை மீண்டும் கை கொடுக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், சிவவாக்கிய சித்தர் வழிபட்ட தலம். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில், சுப்பிரமணிய ஸ்வாமி சன்னதியின் முன் மண்டபத்தில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டி உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், "ஆண்டவன் உத்தரவு" பெட்டியில் என்ன பொருள் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்த பின்னரே, கோவிலுக்குள் செல்வர். பக்தர்கள் கனவில் தோன்றும் முருகப்பெருமான் ஏதேனும் ஒரு பொருளைக் கூறி, அதை ஆண்டவர் பெட்டியில் வைக்குமாறு கூறுகிறார். அந்தப் பொருளை, சம்பந்தப்பட்ட பக்தர் கோவிலுக்கு கொண்டு வருவார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, மூலவர் சன்னதியில் பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். ஸ்வாமி உத்தரவு கிடைத்தால், அந்தப் பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த பொருள் வரும் வரை, இந்தப் பொருளுக்கு தினசரி பூஜை நடக்கும். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பெருந்துறை, சுப்பிரமணியம் என்பவருக்கு கிடைத்த உத்தரவுப்படி, 2011 டிசம்பர் 13ல் ஆற்றுநீர் வைக்கப்பட்டது. இதற்கு அடுத்தநாள் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதேவேளை, சென்னை அருகே பழவேர்காடு ஏரியில், ஜனவரி 18ல் படகில் சென்ற, 20 பேர் பலியாகினர். ஈரோடு, வெண்டிபாளையம் காவிரியாற்றில், கதவணை மின் உற்பத்தி நிலையத்தில் தண்ணீர் திறந்தபோது, ஆறுபேர் பலியாகினர்.இதையடுத்து, 2012 ஜூலை 7ல் சென்னையை சேர்ந்த சுப்பிரமணி கொண்டுவந்த, வேட்டி, துண்டு வைக்கப்பட்டது. தமிழக அரசு, 8ம் தேதி இலவச வேட்டி, சேலை ஆண்டு முழுவதும் நெசவு செய்து வழங்க நெசவாளர் சங்கங்களுக்கு உத்தரவிட்டது.

இதற்கடுத்த ஐந்து நாளிலேயே, ராசிபுரம், உஷாராணி கனவில், ஐந்து கிலோ மஞ்சள் தூள் வைக்க உத்தரவு வந்தது. குவிண்டால், 3,500 ரூபாய்க்கு விற்ற மஞ்சள் படிப்படியாக, 6,000 ரூபாய் வரை உயர்ந்தது.நேற்று முன்தினம் கோவை, கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி கனவில், தண்ணீர் வைக்குமாறு உத்தரவு வந்தது. மூலவர் சன்னதியில் உத்தரவு கேட்கப்பட்டு, ஆண்டன் உத்தரவு பெட்டியில் சிறிய சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆற்றுநீர் வைக்கப்பட்டபோது, பருவமழை பொய்த்ததுடன், ஆற்றுநீரால் உயிர் பலிகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதால், பருவம் தவறி மழை பெய்ய வாய்ப்புள்ளது என, பக்தர்கள் நம்புகின்றனர்.

THANKS TO தினமலர்

No comments:

Post a Comment