போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 6 August 2012

கோவையில் சீருடையில் சென்று கைவரிசை காட்டினார்: சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்தவர் கைது


கோவையில் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி மிரட்டினார்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவையில் அவினாசி சாலை கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் மூலம் இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஒன்று புதிதாக வாங்கினார். அவர் தன்னை சி.பி.ஐ. போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதாக கூறினார். சீனிவாசன் 4 மாதங்கள் கழித்து அந்த மோட்டார் சைக்கிளை எக்ஸ்சேஞ்ச் மேளாவில் கொடுத்து ரூ. 30 ஆயிரம் வாங்கிக் கொண்டார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார். உடனே எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்தியவர்கள் பணத்தையும் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளையும் எடுத்து செல்கிறீர்களே என்று கேட்டனர்.


அதற்கு சீனிவாசன் தான் சி.பி.ஐ.யில் வேலை பார்ப்பதாகவும் பணம் கேட்டு தொந்தரவு செய்தாலோ, மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல வந்தாலோ உங்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவேன் என்று மிரட்டினார். இருந்தபோதிலும் சீனிவாசனிடம் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் கொடுக்கவில்லை.

குட்டு வெளிப்பட்டது

இதை தொடர்ந்து எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். புகாரை தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மணி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மோசடி செய்தவர் சி.பி.ஐ.யில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக போலீசாருக்கு தெரியவந்தது.

சி.பி.ஐ.யில் பணியாற்றுபவர் மோசடியில் ஈடுபடுகிறாரா என்று அதிர்ச்சியடைந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சீனிவாசனை பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் காத்திருந்தது. இதில் சீனிவாசன் மோசடி ஆசாமி என்றும் அவர் சி.பி.ஐ.யில் பணியாற்றவில்லை என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து சீனிவாசனை அவருடைய வீட்டில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் 2 பேரிடம் மோசடி

சீனிவாசன் கோவையில் மோட்டார் பம்பு பிட்டிங் செய்யும் தொழில் செய்து வருபவர் என்றும் அவருடைய மனைவி சபானா என்றும் தெரியவந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் கோவையை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் ரூ. 25 ஆயிரம் மோசடி செய்துள்ளார். சதீஷ் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூ. 25 ஆயிரத்தை சதீஷிடமிருந்து சீனிவாசன் பெற்றுக் கொண்டார். ஆனால் சீனிவாசன் பணத்தை வாங்கிய பின்னர் தலைமறைவாகி விட்டார். இதனால் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டனர். அப்போது தான் சீனிவாசன் மோசடி ஆசாமி என்று அவருக்கு தெரியவந்தது.

இதே போல சீனிவாசன் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக் கொண்டு கோவையில் உள்ள ஒரு வங்கி மேலாளரை ஏமாற்றி உள்ளார். வங்கியில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாத ஒருவரின் காரை பறிமுதல் செய்து தருவதாக கூறிதேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளரிடம் ரூ. 10 ஆயிரத்தை சீனிவாசன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி வாகனத்தை பறிமுதல் செய்து தரவில்லை. அப்போது தான் சீனிவாசன் ஒரு மோசடி ஆசாமி என்று வங்கி மேலாளருக்கு தெரியவந்தது.

அடையாள அட்டை-சீருடை பறிமுதல்

மேற்கண்ட மோசடி விவரங்கள் போலீசாரிடம் பிடிபட்ட சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகார்கள் போலீசாரிடம் வந்துள்ளன. எனவே சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு மேலும் பலரிடம் சீனிவாசன் மோசடி செய்திருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட போலி சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த அடையாள அட்டையில் தமிழ்நாடு போலீஸ் என்றும் சீனிவாசன் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ரத்த வகை பிரிவு உள்பட ஒரிஜினல் போலீசாரின் அடையாள அட்டையில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றிருக்குமோ அதை போல தகவல்களை கொண்ட போலியான அடையாள அட்டையை சீனிவாசன் தயாரித்துள்ளார். சி.பி.ஐ. போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் அமைப்பு. ஆனால் அதில் தமிழ்நாடு போலீஸ் என்று குறிப்பிட்டு சீனிவாசன் போலியான அடையாள அட்டை தயாரித்துள்ளார்.

கோவை போலீசார் அதிர்ச்சி

மேலும் சீனிவாசன் வீட்டிலிருந்து சப்-இன்ஸ்பெக்டர் அணியும் சீருடையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சீருடையை அணிந்து கொண்டு தான் அவர் பலரை மிரட்டியுள்ளார். கோவையின் இதயம் போன்ற பகுதியில் போலீஸ் சீருடையில் சென்று சீனிவாசன் பலரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தான் அவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். போலீசார் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியிலேயே சீனிவாசன் தைரியமாக கைவரிசையை காட்டியுள்ள செயல் கோவை போலீசாரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment