போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 14 August 2012

மின்னுற்பத்தி குறைவால் மீண்டும் மின்வெட்டு அவதி : காற்று வீசாததால் ஓய்வெடுக்கும் காற்றாலைகள்

திருப்பூர் : காற்றாலை மின்னுற்பத்தி, மூன்றில் இரண்டு பங்கு குறைந்ததால், திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கியுள்ளது. மின்வெட்டு நேரமும், மின் விடுமுறை நாளும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்ட
மிடப்பட உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், தொழில் துறையினரும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், உயர் மின்னழுத்த இணைப்பு தொழிற்சாலைகள், பனியன், விசைத்தறி தொழில் நிறுவனங்கள், வணிக மின் இணைப்புகள், வீட்டு மின் இணைப்புகள் என 5.72 லட்சம் இணைப்புகள் உள்ளன. தினமும் 7.2 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மின் பற்றாக்குறை காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, நான்கு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரமும் ஏற்பட்டது. தொழில் நகரமான திருப்பூர், இதனால் கடுமையாக பாதித்தது. பனியன் உற்பத்தி பாதிப்பு; ஏற்றுமதி தொழில் பாதிப்பு; தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு; தொழில் முடக்கம் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. மின்வெட்டு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு இரு நாட்கள் மின் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.


ஆண்டுதோறும் கை கொடுக்கும் காற்று சீசன், ஏப்., இறுதியில் துவங்கியது. காற்றாலை மின்னுற்பத்திடிப்படியாக அதிகரித்தது. இதனால், மின்வெட்டு நேரமும் படிப்படியாக குறைந்தது. காற்றாலை மூலம் அதிகபட்சமாக 3,000 மெகாவாட் வரை மின்னுற்பத்தி செய்யப்பட்டது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் மின்வெட்டு இல்லை என்ற நிலை உருவாகி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டு கணவாய் காற்றின் திசையில் அமைந்துள்ள காற்றாலை களுக்கு, ஏப்., துவங்கி செப்., வரை காற்று சீசன் நீடிக்கும். இந்தாண்டு, சற்று முன்னதாகவே காற்று சீசன் முடிந்துள்ளது. காற்று வீசும் வேகமும் நிலையில்லாமல் உள்ளதால், காற்றாலை மின்னுற்பத்தி 1,000 முதல் 1, 200 மெகாவாட் வரை மட்டுமே உள்ளது.இதனால், மின்வெட்டு நேரம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நகர பகுதிகளில் நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரையிலும், கிராம பகுதிகளில் எட்டு மணி நேரம் வரையிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. நான்கு மாதமாக மின்வெட்டு 
இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக, தொழில் துறையினரும், பொதுமக்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.மேலும், தென்மேற்கு பருவ மழையும் ஏமாற்றியுள்ளதால், அணைகளின் நீர் மட்டம் அதல பாதாளத்திலேயே உள்ளது. இதனால், நீர் மின் உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது. மின் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்து வருவதால், மின் வெட்டு நேரமும், தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் நிர்மலதா கூறியதாவது:
திருப்பூருக்கு தினமும் 7.2 மில்லி யன் யூனிட் மின்சாரம் தேவை. 3,000 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்து வந்தது. தற்போது, 1,200 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க "லோடு செட்டிங்' செய்யப் பட்டு, திருப்பூருக்கு 6.5 மில்லியன் யூனிட் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால், மின் வெட்டு ஏற்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment