போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 1 July 2012

இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: நீதித்துறை நடுவர் வேண்டுகோள்


இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: நீதித்துறை நடுவர் வேண்டுகோள்
பல்லடம், ஜூலை. 1- 
 
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழுவும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
 
இதில் கலந்து கொண்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தலைவர் பல்லடம் செல்வி பர்ஜாத் பேகம் பேசியதாவது:-
 
ஏழைகளுக்கான வரப்பிரசாதம் இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவின் இலவச சட்ட உதவி மையம். பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதித்துறையில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி எழை எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
 
மேலும் எத்தனையோ வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த செலவிலும் குறைந்த கட்டணத்திலும் ஏழைகளுக்கு வழக்காடுகின்றனர். ஆகவே பொதுமக்கள் இந்த அரிய இலவச சட்ட உதவி மையத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் முறையான முழு நேரப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர் சட்டம் 1986ல் உருவாக்கப்பட்டது. இதில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் முதல் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை வரை விதிக்க வழி உள்ளது என்றார். குற்றவியல் நீதித்துறை நடுவர் பங்கேற்பார்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
 
அதாவது நீங்கள் கடைக்கு சென்று காய்கறி வாங்கினால் முருங்கைக்காய், மாங்காய் எப்படி வாங்குவீர்கள்? என்று கேட்டார். அவை பிஞ்சாக இருந்தால் வாங்க மாட்டோம் என்றனர். அப்படியென்றால் ஏன் பிஞ்சுக்குழந்தைகளை மட்டும் பணிக்கு அமர்த்தி அவர்கள் வருவாயில் வாழ வேண்டும். இது அவமானமல்லவா? என்று கேட்டார்.
 
மூத்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் மீனா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் முதுநிலை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், வட்ட சட்டப்பணிகள் குழு மணிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜெரேமியா ஜெபஸ்டின் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment