போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 8 July 2012

திருப்பூர்:அங்கன்வாடி பணி: மாற்றுத்திறனாளிகளுக்கு அவகாசம்

திருப்பூர்:அங்கன்வாடி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கால அவகாசமும், வயது வரம்பு தளர்வும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில், 193 அங்கன்வாடி பணியாளர்கள், 56 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 209 மைய உதவியாளர்கள், நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு மைய பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு, கடந்த ஜூன் 1ம் தேதியுடன் 25 வயது பூர்த்தியானவராகவும், 38 வயதை கடக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.மைய உதவியாளர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள், 25 வயது பூர்த்தியானவர்களாகவும், 43 வயதை கடக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் (பெண்கள் மட்டும்), அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில், 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment