போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 1 July 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
திருப்பூர், ஜூலை.1- 
 
அவிநாசி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆர்.ஏ.தோட்டத்தில் தொடங்கிய இந்த முகாமிற்கு கல்விக்குழு சார்பில் எஸ்.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில கல்விக்குழு பொறுப்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான என்.குணசேகரன் முகாமின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
 
இதில் திருப்பூர் மாவட்ட கல்விக்குழு ஆசிரியர்களாக சுமார் 50 பேர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் தத்துவம், கட்சித் திட்டம், சோசலிச அனுபவம், தலைமைப் பண்பு உள்பட 20 தலைப்புகளில் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு அதில் இருந்து குறிப்பிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களாக பங்கேற்றோர் வகுப்பு நடத்தி பயிற்சி பெற்றனர்.
 
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ முகாமை வாழ்த்திப் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு முடிவுப்படி கட்சி விரிவாக்கம், ஊழியர்களைத் தரப்படுத்துதல், ஒற்றுமைப்படுத்துதல் என்ற நோக்கத்தை நிறைவேற்ற கல்விக்குழு ஆசிரியர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், கிராமப்புற, சாமானிய மக்களிடமிருந்து கட்சிக்கு வரும் எளியவர்களுக்கும் கட்சியின் அரசியல் தத்துவம் புரியும் விதத்தில் எளிய முறையில் வகுப்பு எடுப்பதற்கு ஏற்ப ஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
இதுதவிர வரலாறு என்றால் என்ன என்ற தலைப்பிலான புத்தகத்தில் இருந்து ஆசிரியர்கள் குறிப்பு எடுப்பது பற்றி செயல்முறை பயிற்சியும் பெற்றனர். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் விதம், உள்ளடக்கம், குறிப்பு எடுப்பது என பன்முக அம்சங்களில் உள்ள நிறைகுறைகளை செழுமைப்படுத்தும் விதமாக மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தொகுப்புரை வழங்கினார்.
 
இரண்டாம் நாள் அமர்வுக்கு கல்விக்குழு சார்பில் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். இந்த இரண்டு நாள் முகாமில் நாமக்கல் மாவட்ட கல்விக்குழு பொறுப்பாளர் தங்கமணி முழுமையாகப் பங்கேற்றதுடன் வாழ்த்திப் பேசினார்.
 
கல்விக்குழுவின் வரக்கூடிய நாட்களுக்கான பணிகள் குறித்து மாவட்டக் கல்விக்குழு சார்பில் எஸ்.முத்துக் கண்ணன் உரையாற்றினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் அ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்விக்குழு அமைப்பாளர் அ.நிசார் அகமது, கல்விக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment