போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 17 July 2012

திருப்பூரில், இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணி; ரத்து செய்ய திட்டம்?


திருப்பூரில், ரயில்வே சுரங்க பாலம் கட்டுமான பணியில், கனரக வாகனங்களுக்கான 
"சப்-வே' பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கான "சப்-வே' பணியை ரத்து செய்ய ரயில்வே துறை முயற்சித்து 
வருகிறது. திருப்பூரை இரண்டாக பிரிக்கும் வகையில், ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இரு பகுதி மக்களும் மேம்பாலம் சுற்ற வேண் டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை (திட்டம் ) சார்பில் 20 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. பிரிட்ஜ்வே காலனி பகுதியில், கனரக வாகனங்கள் செல்லும் வகையில், எட்டு மீட்டர் அகலம், ஐந்தரை மீட்டர் உயரம், 48 மீட்டர் நீளத்துக்கு ஒரு சுரங்க பாதையும், கார், இரு சக்கர வாகனங்கள் கடப்பதற்காக, மூன்று மீட்டர் அகலம், இரண்டே முக்கால் மீட்டர் உயரம், 30 மீட்டர் நீளத்துக்கு இலகு ரக வாகனங்களுக்கான சுரங்க பாதையும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ரயில்வே துறை சார்பில், கனரக வாகனங்களுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், முதல் ரயில்வே கேட் போல், கொங்கு மெயின் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையிலான இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணிகளை துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததாரருக்கு சாதகமாக ஒட்டுமொத்தமாக பணியையே ரத்து செய்துவிட, ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி மற்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:முதல் லெவல் கிராசிங்கிற்கு மாற்றாக, "சப்-வே' அமைக்கும்போது, கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு தனித்தனியாக "சப்-வே' அமைத்தல், வெள்ளலூர் சுரங்க பாதை பணி என மூன்று பணிகளை இணைத்து, ஒரே பணியாக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, எட்டு கோடி ரூபாயை, இரண்டாண்டுகளுக்கு முன்பே ரயில்வே 
ஒதுக்கியுள்ளது. வெள்ளலூர் மற்றும் டி.எம். எப்., சுரங்க பாலம் பணி நடந்து வருகிறது. இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' அமைக்கும் பணி, இதுவரை துவக்கப்படவில்லை. மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் தடையாக உள்ளன; மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என ரயில்வே துறை கோரிக்கை விடுத்தது. உடனடியாக, பாதாள சாக்கடை குழாயை மாற்றியமைத்துக் கொள்ள, திட்டம் வடிவமைத்து, டெண்டர் பணியை மாநகராட்சி முடித்து, ரயில்வே, மாநகராட்சி சேர்ந்து பணியை துவக்கினால், ஒரே சமயத்தில் இரண்டு பணிகளும் முடிவடையும். மக்களுக்கு சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, 
ஒப்பந்ததாரருக்கு சாதகமாக திட்டத்தையே ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்."சப்-வே' பணியே துவங்காத நிலையில், தற்போதுள்ள இரண்டு ரயில்வே கேட்களையும், பணி முடிந்ததும் மூட அனுமதிக்க வேண்டும் என கலெக்டருக்கு, ரயில்வே துறை கடிதம் அனுப்பியுள்ளது. கனரக வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையாக பயன்படும் "சப்-வே' பணியை மட்டும் முடித்து, இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணி ரத்து செய்யப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். இரண்டு ரயில்வே கேட்கள் வழியாக, ஏராளமான இலகு ரக வாகனங்கள் கடக்கின்றன. இப்பணி ரத்து செய்யப்பட்டால், மேம்பாலம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு, ரயில்வே மேம்பாலத்தில் நெரிசல் தொடரும். அதனால், இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணிகளை மேற்கொள்ள, மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment