போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 15 July 2012

எகிறும் மணல் விலை திருப்பூரில் கட்டுமான துறைக்கு சிக்கல்

திருப்பூர் : அதிக லோடு ஏற்றி வரும் மணல் லாரிகளை போலீசார் பிடித்து அப ராதம் விதிப்பதால், மணல் விலை "எகிறி' வருகிறது. புதிதாக வீடு கட்டுவோரும், கட்டுமான துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றில், கரூர், சேவூர் உள்ளிட்ட நான்கு மணல் ஏற்றும் மையங்களில் மணல் விற்பனை நடக்கிறது. தினமும் 7,000 லாரிகள் மூலம், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு மணல் வரத்து நிலவுகிறது. கடந்த மாதம் மணல் லாரிகள் லோடு, 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை மட்டுமே விற்று வந்தது.
தற்போது, போலீஸ் கெடுபிடி காரணமாகவும், மணல் குவாரி மூடும் அபாயம் உள்ளது என காரணம் கூறி, மணல் விலை லோடுக்கு 2,000 ரூபாய் வரை உயர்த்தி விற்கப்படுகிறது. மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மணல் விலையும் "எகிறி' வருகிறது. இதனால், கட்டுமான துறை பாதிக்கப்பட்டு வருகிறது.
மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
லாரிகளில் வழக்கமாக, 4 முதல் 4.5 யூனிட் வரை மணல் ஏற்றி வரப்படும். குவாரிகளில், யூனிட்டுக்கு 1,143 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு யூனிட்டுக்கு 4,572 ரூபாய் மற்றும் விற்பனை வரி 210 ரூபாய் என 4,782 ரூபாய் குவாரிகளில் வசூலிக்கப்படுகிறது. மட்டம் செய்வதற்கு 50 ரூபாய் செலவாகிறது. கி.மீ., பொருத்து லாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் டீசல் செலவு ஆகிறது. கட்டடங்களில் மணல் இறக்கு கூலி ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. டிரைவருக்கு 1,000 மற்றும் தேய்மான செலவு, போலீசுக்கு மாமூல் என 11,500 ரூபாய் வரை செலவாகிறது.

ஏரியா மற்றும் வாடிக்கையாளரை பொருத்து நான்கு யூனிட் மணல் 12,500 முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட கூடுதலாக மணல் ஏற்றி வரும் லாரிகள், திருப்பூர் மாவட்டத்துக்குள் நுழையும்போது, போலீசாரால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
கூடுதல் லோடு இருந்தால் இரண்டாயிரம் ரூபாயும், கூடுதலாக இருக்கும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ஆயிரம் ரூபாய் என போலீசார் அபராதம் விதிக்கின்றனர். கடந்த 15 நாளில், 300க்கும் மேற்பட்ட லாரிகள் போலீசாரால் பிடிக்கப்பட்டு, லாரிக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால், தற்போது 2.5 யூனிட் மணல் மட்டுமே ஏற்ற வேண்டியுள்ளது. மற்ற செலவுகள் குறையாமல், மணல் கொள்ளளவு மட்டுமே குறைந்துள்ளது. மணல் குவாரியில், 2.5 யூனிட் மணல் கேட்டாலும், நான்கு யூனிட்டுக்கு பணம் கட்டுமாறு கூறுகின்றனர். இதனால், தற்போது, 4.5 யூனிட் மணலுக்கு கொடுத்த விலையே 2.5 யூனிட் மணலுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், மணல் விலை ஏறியுள்ளது. போலீசாருக்கு செலுத்தும் அபராதமும், வாடிக்கையாளர்களிடமே வசூலிக்க வேண்டி யுள்ளது. போலீசாருக்கு பயந்து வழக்கமாக ஓடும் லாரிகளில், 50 சதவீதம் இயக்கப்படாமல் உள்ளன.
மணல் குவாரிகள் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அறிக்கைப்படி, மணல் குவாரிகள் மூடப்படும் அபாயமும் உள்ளது. இப்பிரச்னை காரணமாகவும் மணல் விலை ஏறியுள்ளதோடு, வரத்தும் குறைந்துள்ளது, என்றனர்.
போலீசார் தரப்பில், " வழக்கமாக லாரிகளில் 4.5 யூனிட் மணல் ஏற்றி வந்தாலும், வாடிக்கையாளருக்கு இரண்டரை முதல் மூன்று யூனிட் மணல் மட்டுமே இறக்குகின்றனர். ஒன்று முதல் ஒன்றரை யூனிட் மணல் "கட்டிங்' போடப்பட்டு, ஒரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஓவர் லோடு மணல் லாரிகள் பிடிப்பதால், வாடிக்கையாளருக்கு பாதிப்பில்லை. மணல் லாரிகளுக்கே பாதிப்பு,' என்றனர்.

No comments:

Post a Comment