போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 3 July 2012

திருப்பூர், "யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஆட்சியரக வளாகம் கட்ட வேண்டும்'


திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் மேற்கு பூம்புகார் நகரில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம் கட்ட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மேற்கு பூம்புகாரில் வசிக்கும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான ஜி.ரத்தினசாமி தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் கூறியது:
புதிய மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்படுவது இந்த மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும். அது வரவேற்கத்தக்கது.
அதேசமயம், புதிய வளாகம் கட்டும்போது மேற்கு பூம்புகார் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இப்பணியை நிறைவேற்ற வேண்டும். பாதிப்பு ஏற்படுமானால் மாற்று இடம், நிவாரணம் வழங்க வேண்டும். இந்த விஷயங்களில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இப்பணிக்காக சாமானிய மக்கள் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்பது சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல, மா.கம்யூ கட்சியின் முடிவும் இதுதான்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியரகம் அமைப்பதற்கு இடம் தேர்வு நடைபெற்றபோது, அமைச்சராக இருந்த சண்முகவேலுவிடம் இப்பகுதி மக்களின் அச்சம் குறித்து நானும், தற்போது அமைச்சராக உள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தனும் முறையிட்டோம். இங்கு மாவட்ட ஆட்சியரகம் அமைவதாக இருந்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று ஏற்பாடு செய்யவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாக அரசு சார்பில் உறுதியளித்தார்.
தற்போது ஆட்சியரக வளாகம் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் என்றார்.
கூட்டத்தில், கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெள்ளியங்கிரி, சுரேஷ் மற்றும் மேற்கு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment